Sunday, May 8, 2016

மதுக்கரை மார்கெட் பள்ளியை மேம்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்

மதுக்கரை மார்கெட்டில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்கக் கோரியும், அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்தக் கோரியும் மறுமலர்ச்சி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு பெற்றோர்கள், மாணவர்கள், மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது



அரசு பள்ளிகளைப் பாதுகாக்கவும், உலகத்தர பள்ளியாக்கவும் மதிமுக விழிப்புணர்வுப் பிரச்சாரம்




Sunday, May 1, 2016

மதுவிலக்கை வலியுறுத்தி இளையதலைமுறையினர் கலந்து கொண்ட மராத்தான்

கோவை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரத அறப்போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், மதுவிலக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிடன் காதுகளில் சங்கு ஊதியது போல தமிழக அரசு யாருடைய குரலுக்கும் செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு மதுவினால் வரும் வருமானம்தான் முக்கியமாகப் போய் விட்டது. அப்படி வரும் வருமானத்தின் பாதியை இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு போலியான பொருட்களை வழங்க முடியும். அது மட்டுமல்ல, முக்கிய காரணமே அதிமுகவினரும், திமுகவினரும் நடத்தி வரும் மது ஆலைகளிலிருந்து தொடர்ந்து மதுவை வாங்கினால்தானே அந்த மது ஆலை கோடீஸ்வரர்கள் வாழ முடியும்.

ஒரு அமைதியான சூழலில், அடுத்து என்னமாதிரியான போராட்டங்களை மதுவிலக்கை வலியுறுத்தி முன்னெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது என் சிந்தையில் உதித்ததுதான் இளையதலைமுறையினரை வைத்து நடத்தும் மராத்தான் போட்டி. எங்கள் பொதுச்செயலாளருக்கும் சரி எங்களுக்கும் சரி இளையதலைமுறையினர் மூலமே தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவர்களை வைத்து மராத்தான் ஓட்டப் போட்டி நடத்தலாம் என்று எண்ணம் தோன்றியது. அதை பொதுச்செயலாலருக்குத் தெரியப்படுத்தி, அதை நடத்த ஒப்புதலும் வாங்கி விட்டேன். 

அதன்படி நவம்பர் 23ம் தேதி 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் தொடங்கி மதுக்கரை மார்கெட்டில் முடிவுற திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றது. அதற்கேற்ப அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கினர். போட்டியன்று காலை 5.30 மணியிலிருந்தே மாணவர்களும், மாணவிகளும், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் குவியத் தொடங்கினர். சுமார் 22,000 பேர் இந்த ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் இந்த அளவுக்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. 

வைகோ போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் நின்றுவிடாமல் மாணவ-மாணவிகளிடையே தானும் ஓட்டத்தில் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடினார். அவருக்கு மிக்க மகிச்சி, பெரிய அளவுக்கு மதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய மராத்தான் போட்டிக்கு அதுவும் ஒரு அரசியல் கட்சி நடத்தும் போட்டிக்கு இவ்வளவு பேர் திரண்டு வந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



கோவையில் நடத்திய மராத்தான் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 5ம் தேதி 2015 நடைபெறும் என்று வைகோ அறிவித்தார். என்னை போட்டிக்காகத் திட்டமிடச் சொன்னார். அதன்படி திட்டமிட்டு சென்னையில் நடத்தினோம், கடற்கரையில் காலை 5 மணியிலிருந்தே கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்தது. சென்னையில் சுமார் 62,000 பேர் மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டனர். முன்னர் போலவே, வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்து தானும் ஓட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.



கோவை மற்றும் சென்னையைத் தொடர்ந்து திருச்சியில் நாங்கள் நடத்துகிறோம் என்று திருச்சி மாவட்டச் செயலாளர்களும், மருத்துவர் சகோதரி ரொஹையா அவர்களும் முன்வந்தனர். மீண்டும் வைகோ அவர்கள் என்னை போட்டியைத் திட்டமிடக் கூறினார், அதன்படி திட்டமிட்டு மூன்றாவது திருச்சியில் மீண்டும் பிரமாண்டமாக சுமார் 42,000 பேர் கலந்து கொண்ட மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. 


முக்கியமான ஒன்று மூன்று மாநகரங்களிலும் மிகப்பெரிய அளவில் இளையதலைமுறையினர் கூடிய மராத்தான் போட்டியில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடந்து விடக்கூடாது என்று மிகுந்த கவனமாக இருந்தோம், அதன்படி ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை. வெற்றிகரமாக போட்டியை நடத்த உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும், எங்களை நம்பி தங்கள் பிள்ளைகளை போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி.

மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம்

தமிழகத்தை சீரழித்துவரும் மதுவை ஒழித்து இளையதலைமுறையினரைக் காக்க "மதுவிலக்கு, அதுவே எங்களது இலக்கு" என்ற தாரக மந்திரத்தோடு எங்களது பொதுச்செயலாளர் வைகோ போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதில் ஒன்று மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. 

இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணி என அனைத்து அணிகளிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்து 1200 பேர் கொண்ட குழுவாக அமைத்து அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து நடைப்பயணத்துக்கு தயார் செய்தோம். இவை அனைத்திலும் வைகோ கலந்து கொண்டு இளையதலைமுறையினரை ஊக்கப்படுத்தினார். 

எங்களது பொதுச்செயலாளர் பொடா சிறையிலிருந்து வெளிவந்தவுடன் குமரியிலிருந்து சென்னை கடற்கரை வரை மேற்கொண்ட 42 நாட்கள் நடைப்பயணத்தின் போதும் மதுவிலக்கு ஒரு பிரச்சாரமாக இருந்தது. அன்று மதுவின் கொடுமை இன்றுபோல் இல்லை, இன்று நடக்கும் ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னும் மது ஒழிந்திருக்கிறது. ஆகவே மது ஒழிப்பு என்ற வேள்வியில் முழுமூச்சோடு வைகோ களத்தில் இறங்கினார். அவருக்கு உறுதுணையாக கட்சித் தொண்டர்களான நாங்கள் இருக்கிறோம்.

எங்களின் முதல் கட்ட நடைப்பயணம் டிசம்பர் 12ம் தேதி, 2012ம் வருடம் உவரியில் தொடங்கியது. எங்களின் போர்ப்படைத் தளபதியான வைகோ மொத்தப் படையை முன்னின்று நடத்திச் செல்ல, மாநில இளைஞரணிச் செயலாளரான நான் இளைஞரணிப் படையை ஒழுங்குபடுத்தி நடத்திச் சென்றேன். டிசம்பர் 25ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டத்தொடு எங்களது நடைப்பயணம் முடிவுற்றது.



எங்களின் இரண்டாம் கட்ட மதுவிலக்கு நடைப்பயணம் பிப்ரவரி 18ல் 2013ம் வருடம் கோவளத்தில் தொடங்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மண்ணான காஞ்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று பிப்ரவரி 28ல் மறைமலை நகரில் முடிவுற்றது.



எங்களின் மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைப்பயணம் ஏப்ரல் 18, 2013ம் வருடம் பொள்ளாச்சியில் தொடங்கி, தந்தை பெரியார் பிறந்த பூமியான ஈரோட்டில் ஏப்ரல் 28ல் முடிவுற்றது.




Saturday, April 30, 2016

அட்டப்பாடி அணை ஆபத்து

கோவை: முல்லைப் பெரியாரில் அணை கட்ட முயன்று வைகோ அவர்களின் தொடர் போராட்டத்தால் மூக்கறுபட்டுப் போன கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்ட முயற்சி செய்தது, 

அப்படிக் கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சனை வரும் என்பதைக் கருத்தில் கொண்டு கழகத் தோழர்களின் உதவியோடு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அட்டப்பாடிக்கே சென்று ஆர்ப்பாட்டம் செய்தோம், இதன் மூலம் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம்.


வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, கோவை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுமதி கோரி மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறும் அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளரிடம் எனது மற்றும் மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் ஆகியோர் தலைமையில் வெள்ளலூர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தோம் (22.01.2013). குறிச்சி நகர செயலாளர் செல்வராஜ், வெள்ளலூர் நகர செயலாளர் டேனியல் உடன் உள்ளனர்


தமிழின உரிமை காக்க வெலிங்கடன் இராணுவ முகாம் முற்றுகை

நீலகிரி: சிங்கள இனவெறி அதிகாரிகளுக்கு இந்திய அரசு பயிற்சி தமிழகத்தில் பயிற்சி அளிக்காது என்று அப்போதைய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்த பிறகும், குன்னூரில் உள்ள வெலிங்கடன் இராணுவ முகாமில் அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது தலைமையில் கழகத் தோழர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் காவலர்களால் கைது செய்யப்பட்டோம்.





Friday, April 22, 2016

வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம்

கோவை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளலூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு பூட்டு போடும் போராட்டம் அக்டோபர் 14ம் தேதி 2012ல் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்போதைய புறநகர் மாவட்டச் செயலாளராகிய நான், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜுனராஜ் ஆகியோர் தலைமையில் 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெள்ளலூர் ரோடு - ஜி.டி. டேங்க் சந்திப்பில் இருந்து 1 கீ.மீ.தூரம் ஊர்வலமாக வந்து குப்பைக்கிடங்கின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட முயன்றோம்.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு  நின்ற காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தோம். குப்பைக் கிடங்கை முழுமையாக இங்கிருந்து அப்புறப்படுத்தக் கோரி கோசங்கள் எழுப்பினோம். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தடையை மீறி குப்பைக் கிடங்கை நோக்கி செல்ல முயன்றோம். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எங்களை கைது செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "ஊருக்கு அப்பால் பல கீ.மீ.தொலைவில்தான் குப்பைக் கிடங்கு இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி இதுபோன்ற தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்றேன்.



அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

மதுக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டது

மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மிகவும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருகின்றனர். பிரசவம் மற்றும் ஸ்கேன் எடுக்கவும் மதுக்கரை சுகாதார நிலையத்திற்கே சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரும் அனுப்பப்படுகின்றனர். ஆனாலும் கூட தற்போது தனியாக மகப்பேறு மருத்துவ இல்லை. சரியான அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை.

கோவையின் தெற்குப் பகுதியில் எங்குமே அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்படவில்லை. மிகவும் அதிக நோயாளிகள் வருகின்ற மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்ற மனுவோடு மதுக்கரைப் பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



அதேபோல, மயிலேரிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது.






Wednesday, April 20, 2016

போத்தனூர் அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கோவை: போத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி 16.12.2015 அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்;

15.12.2015 அன்று பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துள்ளது. இது மிகவும் வருத்தப்படக்கூடிய சம்பவம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. 

போத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம்
  • 24 மணிநேரமும் மருத்துவர் உள்ள வகையில் மேம்படுத்த வேண்டும்
  • 30 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக மாற்றப்பட வேண்டும்
  • மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்
  • பிரசவத்தின் அறுவை சிகிச்சையும் இங்கேயே செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்த வேண்டும்
  • சுந்தராபுரம் பகுதியில் புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும்
  • தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்



Tuesday, April 19, 2016

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க மதிமுக வலியுறுத்தல்


இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மருத்துவமனையை கோவையில் அமைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை 13.06.2014 அன்று வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 15.07.2014 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு AIIMS மருத்துவமனை தொடங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.








மருத்துவமனையின் இடத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையின் இடத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளருக்குக் கடிதம் 16.11.2013 அன்று எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது "சென்னையில் தலைமைச் செயலகத்தை மாற்றி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியில் மருத்துவமனை வளாகம் வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தனி நபர்களுக்கும், மாநகராட்சிக்கும் மட்டுமே பலன் கிடைக்கும், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. மக்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதை கைவிட வேண்டும்"





Monday, April 18, 2016

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டி - வைகோவிற்கு நன்றி

வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி. கோவை, குறிச்சி, மதுக்கரை, கிணத்துகடவு, சுந்தராபுரம் உள்ளிட்ட தொகுதி மக்கள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தாமாக கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவளித்து பம்பரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றபோது (16.04.2016)


கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அவர்களும், சிங்காநல்லூர் வேட்பாளர் திரு.ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிங்காநல்லூர் வேட்பாளர் அவர்களுக்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டேன்.


தொண்டாமுத்தூர் தே.மு.தி.க திரு.பாண்டியண் அவர்கள் வாழ்தியபோது


கோவை மாநராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, திரு.அருள், திரு.குணா, திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். 














ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு மனு

மதுக்கரை ஒன்றியம் திருமலையாம்பாளையத்தில் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் கம்பெனி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (13.01.2016)


Tuesday, April 12, 2016

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி சார் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பாராமுகமாக இருந்ததால் 20.11.2012 அன்று கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசுவரன் தலைமையில் மறுமலர்ச்சி திமுக சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்





வாளையாறு முதல் மதுக்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறுமலர்ச்சி திமுக சார்பில் 29.09.2013 அன்று எனது தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடைப்பயணத்தில் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் உள்ளிட்ட ஏரளாமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 



Monday, April 11, 2016

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி மதிமுக நடைபயணம்

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை 2012ம் ஆண்டே முடிக்கக் கோரி கிணத்துக்கடவு முதல் போத்தனூர் வரை அப்போதைய கோவை புறநகர் மாவட்ட செயலாளரான எனது தலைமையில் நடைபயணம் நடைபெற்றது (08-04-2012). 

ஆரம்பத்திலேயே நமக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டது. இரண்டு இடங்களில் நம்மை மறிக்க முயன்று தோற்றுப் போய் வேறு வழியின்று பின்னர் பாதுகாப்பு வழங்கினர். 

நடைபயணத்தை மறுமலர்ச்சி திமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் துவக்கி வைத்தார். மக்களுக்கான போராட்டத்தில் நாம் முன்னிற்போம் என்பது மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டது. 

போத்தனூர் ஆய்வாளர் கழகத்தை பற்றியும், நம்மைப் பற்றியும் உயர்வாக பேசிய போது, இதற்கெல்லாம் காரணமான இந்த அளவுக்கு நம்மை மதிக்கச் செய்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி.