Sunday, May 1, 2016

மதுவிலக்கை வலியுறுத்தி இளையதலைமுறையினர் கலந்து கொண்ட மராத்தான்

கோவை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரத அறப்போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், மதுவிலக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிடன் காதுகளில் சங்கு ஊதியது போல தமிழக அரசு யாருடைய குரலுக்கும் செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு மதுவினால் வரும் வருமானம்தான் முக்கியமாகப் போய் விட்டது. அப்படி வரும் வருமானத்தின் பாதியை இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு போலியான பொருட்களை வழங்க முடியும். அது மட்டுமல்ல, முக்கிய காரணமே அதிமுகவினரும், திமுகவினரும் நடத்தி வரும் மது ஆலைகளிலிருந்து தொடர்ந்து மதுவை வாங்கினால்தானே அந்த மது ஆலை கோடீஸ்வரர்கள் வாழ முடியும்.

ஒரு அமைதியான சூழலில், அடுத்து என்னமாதிரியான போராட்டங்களை மதுவிலக்கை வலியுறுத்தி முன்னெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது என் சிந்தையில் உதித்ததுதான் இளையதலைமுறையினரை வைத்து நடத்தும் மராத்தான் போட்டி. எங்கள் பொதுச்செயலாளருக்கும் சரி எங்களுக்கும் சரி இளையதலைமுறையினர் மூலமே தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவர்களை வைத்து மராத்தான் ஓட்டப் போட்டி நடத்தலாம் என்று எண்ணம் தோன்றியது. அதை பொதுச்செயலாலருக்குத் தெரியப்படுத்தி, அதை நடத்த ஒப்புதலும் வாங்கி விட்டேன். 

அதன்படி நவம்பர் 23ம் தேதி 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் தொடங்கி மதுக்கரை மார்கெட்டில் முடிவுற திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றது. அதற்கேற்ப அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கினர். போட்டியன்று காலை 5.30 மணியிலிருந்தே மாணவர்களும், மாணவிகளும், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் குவியத் தொடங்கினர். சுமார் 22,000 பேர் இந்த ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் இந்த அளவுக்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. 

வைகோ போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் நின்றுவிடாமல் மாணவ-மாணவிகளிடையே தானும் ஓட்டத்தில் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடினார். அவருக்கு மிக்க மகிச்சி, பெரிய அளவுக்கு மதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய மராத்தான் போட்டிக்கு அதுவும் ஒரு அரசியல் கட்சி நடத்தும் போட்டிக்கு இவ்வளவு பேர் திரண்டு வந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



கோவையில் நடத்திய மராத்தான் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 5ம் தேதி 2015 நடைபெறும் என்று வைகோ அறிவித்தார். என்னை போட்டிக்காகத் திட்டமிடச் சொன்னார். அதன்படி திட்டமிட்டு சென்னையில் நடத்தினோம், கடற்கரையில் காலை 5 மணியிலிருந்தே கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்தது. சென்னையில் சுமார் 62,000 பேர் மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டனர். முன்னர் போலவே, வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்து தானும் ஓட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.



கோவை மற்றும் சென்னையைத் தொடர்ந்து திருச்சியில் நாங்கள் நடத்துகிறோம் என்று திருச்சி மாவட்டச் செயலாளர்களும், மருத்துவர் சகோதரி ரொஹையா அவர்களும் முன்வந்தனர். மீண்டும் வைகோ அவர்கள் என்னை போட்டியைத் திட்டமிடக் கூறினார், அதன்படி திட்டமிட்டு மூன்றாவது திருச்சியில் மீண்டும் பிரமாண்டமாக சுமார் 42,000 பேர் கலந்து கொண்ட மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. 


முக்கியமான ஒன்று மூன்று மாநகரங்களிலும் மிகப்பெரிய அளவில் இளையதலைமுறையினர் கூடிய மராத்தான் போட்டியில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடந்து விடக்கூடாது என்று மிகுந்த கவனமாக இருந்தோம், அதன்படி ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை. வெற்றிகரமாக போட்டியை நடத்த உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும், எங்களை நம்பி தங்கள் பிள்ளைகளை போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி.

No comments:

Post a Comment